Home Events ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி

ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி

by admin
0 comment

ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் ‘அகம் புறம்’ தமிழ்ப் பண்பாட்டுக் கண்காட்சி 
கடல் கடந்து தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் தமிழ், தமிழ் வரலாறு, தமிழ்ப்பண்பாடு ஆகியவற்றைப் பேணுவதற்காகச் செய்கின்ற முயற்சிகள் பல. அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாக, ஜெர்மனியில் 2019ஆம் ஆண்டில் திருவள்ளுவருக்கு 2 ஐம்பொன் சிலைகளை தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் உள்ள  லிண்டன் அருங்காட்சியகத்தில் நிறுவியது. அதே அருங்காட்சியகத்தில் சங்ககால வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையிலும், அத்துடன் பல பரிமாணங்களில் தமிழையும் தமிழ் மரபையும் ஐரோப்பா வாழ் மக்களுக்குக் காட்சிப்படுத்தும் வகையிலும்  இந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் `அகம் புறம்` என்ற கருப்பொருளில் 7.10.2022 முதல் 7.5.2023 வரை நடைபெற உள்ள 6 மாத கால கண்காட்சியை லிண்டன் அருங்காட்சியகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியில் தமிழ், தமிழர் வரலாறு பண்பாடு சார்ந்த பல அரும்பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்த தொல் தடயங்கள்:
1876 ஆம் ஆண்டு டாக்டர் யாகோர் ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரும் பொருட்கள்…
150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளன.

அரிக்கமேடு பகுதி அகழாய்வில் கிடைத்த தொல் தடயங்கள்:

இன்றைய பாண்டிச்சேரிக்கு அருகே அமைந்துள்ள அரிக்கமேடு பகுதி 2500 ஆண்டுகளுக்கு முன்பே தூர கிழக்காசிய, கிழக்காசிய நாடுகளிலிருந்தும் மேற்கத்திய நாடுகளிலிருந்தும் வியாபாரிகள் தொடர்ச்சியாக வந்து சென்ற ஒரு பகுதியாக இருந்தது.

இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழாய்வுகள் நிகழ்ந்துள்ளன. 1765 ஆம் ஆண்டு தொடக்கம் பிரெஞ்சு ஆய்வாளர்கள் இப்பகுதி தொல்லியல் முக்கியத்துவம் பெற்ற ஒரு பகுதி என்பதை உறுதி செய்தனர். அதன் பின்னர் 1945 ஆம் ஆண்டு காலகட்டத்தில் சர் வீலர் அவர்கள் மேற்கொண்ட ஆய்வுதான் இன்று வரை பெருமளவில் பேசப்படுகின்ற அரிக்கமேடு அகழாய்வாகக் குறிப்பிடப்படுகிறது.

இங்குப் புகைப்படத்தில் காண்பது சாம்பல் நிறத்தில் உருவாக்கப்பட்ட ஒரு மண்பாண்டத்தில் பொறிக்கப்பட்ட ஓவியமாகும். இது கிரேக்க ரோமானிய ஓவிய வகையை வெளிப்படுத்துகிறது. சோழமண்டல கடற்கரைக்கு வருகை தந்த ஏராளமான ஐரோப்பியக் கப்பல்களில் கொண்டுவரப்பட்ட மண்பாண்டங்களில் பல்வேறு பொருட்கள் இருந்தமை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அத்தகைய ஒரு மண்பாண்டத்தின் உடைந்த ஒரு பகுதியாக இதனைக் கருதலாம்.

இந்த அரும்பொருளைப் பாரிஸ் பிரான்சில் உள்ள கூமே அருங்காட்சியகம் பாதுகாத்து வருகிறது.

ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் அகம் புறம் கண்காட்சியில் வருகின்ற ஆறு மாதங்கள் இந்த அரும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

தமிழி தமிழி கல்வெட்டின் படி:

தமிழ் எழுத்துருக்களின் வளர்ச்சியைப் பற்றி தமிழ் மக்கள் மட்டுமின்றி உலகளாவிய நிலையில் விளக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜெர்மனியில் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அகம் புறம் கண்காட்சியில் ரோஜா முத்தையா ஆய்வு நூலகம் வழங்கி இருக்கும் கிமு 2 அல்லது கிமு 1 காலகட்டத்தைச் சார்ந்த தமிழி கல்வெட்டின் படி ஒன்று இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கண்காட்சி தமிழ் எழுத்துக்களின் ஆரம்பக் கால நிலையை இங்கு வருவோருக்கு எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.

நாகப்பட்டினம் பௌத்த சிற்பங்கள்:
சென்னை அருங்காட்சியகத்தில் பணியாற்றிய ஆய்வாளர் டி.என் ராமச்சந்திரன் அவர்கள் தனது Nagappatinam Bronzes என்ற நூலில் நாகப்பட்டினத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது அங்கு 350 க்கும் குறையாத புத்தரின் சிற்பங்கள் கல், செப்பு மற்றும் வெவ்வேறு உலோகங்களில் செய்யப்பட்ட சிற்பங்கள் கிடைத்ததைப் பற்றி தனது நூலில் குறிப்பிடுகின்றார். இச்செய்தியை நான் எனது ‘ராஜராஜனின் கொடை ஆனைமங்கலம் செப்பேடுகள்’ என்ற நூலில் விரிவாக விளக்கி எழுதியிருக்கின்றேன்.

கடந்த நூற்றாண்டின் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட இந்த அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட சிலைகளில் பல எங்கு உள்ளன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளன என்ற செய்தியை டிஎன் ராமச்சந்திரன் அவர்கள் அப்போது அந்த நூலில் குறிப்பிடுகின்றார் ஆனால் அவை அத்தனையும் இன்றுவரை சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அவை எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்ற கேள்வியும் எழுகிறது.
ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அகம் புறம் கண்காட்சியில் ஜெர்மனி பெர்லின் அருங்காட்சியகத்திலிருந்து ஒரு புத்தர் சிலையும் சுவிசர்லாந்து சூரிச் தேசிய அருங்காட்சியகத்திலிருந்து இரண்டு புத்தர் சிலைகளும் கண்காட்சியில் இடம்பெறும் வகையில் இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன.

அவற்றைத் தான் இங்கே புகைப்படத்தில் காண்கின்றோம். இவை மூன்றுமே நாகப்பட்டினத்தில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் என்ற குறிப்பைத் தாங்கியுள்ளன.

இப்படி அயல்நாடுகளில் பல்வேறு அருங்காட்சியகங்களில் நாகப்பட்டினத்தில் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகள் இன்று காட்சிப்படுத்தப்படுகின்றன. அவை அனைத்தையுமே மீண்டும் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவது அத்தனை சாத்திய பூர்வமான ஒரு காரியம் அல்ல. ஆயினும் தமிழ்நாட்டில் சென்னை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்ற நாகப்பட்டினம் புத்தர் சிலைகளைத் தனி கண்காட்சியில் வைக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதையாவது நாம் முயற்சி செய்யலாம் அல்லவா?

நாகப்பட்டினத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் எத்தனை பௌத்த சிலைகள் உள்ளன என்று விசாரித்த போது ஒரே ஒரு சிற்பம் மட்டும் திருவாரூரில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆக, கிடைக்கின்ற குறிப்புகளின்படி அவை பெரும்பாலும் சென்னை அருங்காட்சியகத்துக்கே சென்றன என்பது தெளிவாகின்றது.

சென்னை அருங்காட்சியகத்தின் பாதுகாப்பு அறைகளில் பெட்டிகளிலேயே இத்தகைய பல நாகப்பட்டினம் பௌத்த சிலைகள் பூட்டப்பட்டுக் கிடப்பதால் யாருக்கு என்ன பயன்? இச்சிலைகள் வெளியே கொண்டுவரப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் அல்லவா?
மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுக்க பாதுகாப்பு அறைகளில் பூட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள வரலாற்றுச் சான்றாதாரங்கள் வெளியே வர வேண்டும்.

நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலைகளுக்குத் தனி கண்காட்சி ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்!

அகம் புறம் கண்காட்சியில் சமணச் சுவடுகள்;
ஒரு முறை இங்கு நண்பர் ஒருவரோடு சமணம் தொடர்பாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாகுபலி சிற்பம் பற்றியும் மேல்சித்தாமூர் கோயிலில் உள்ள ஒரு பாகுபலி சிற்பம் பற்றியும் விவரித்துக் கொண்டிருந்தேன். அவரோ திரைப்பட பாகுபலி சிற்பமோ என நினைத்து என்னிடம் திரைப்படம் பற்றி பேசத் தொடங்கி விட்டார். இப்படி சில அதிர்ச்சி தரும் உரையாடல் அனுபவங்கள் எனக்குப் பல முறை நடந்திருக்கின்றன. இதற்குக் காரணம், பொதுமக்கள் சற்றே நேரமெடுத்து வரலாற்று நூல்களை வாசிப்பது, கலந்துரையாடுவது, நேரில் சென்று பார்த்து வருவது போன்றவற்றில் ஆர்வமில்லாமல் இருப்பதுதான். சரி.. நமது விஷயத்திற்கு வருவோம்.

ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் 8, 2022 அன்று தொடங்கப்பட்ட அகம் புறம் கண்காட்சியில் தமிழ்ப் பண்பாட்டில் இடம் பெறும் சமண சமயம் பற்றி அறிமுகம் செய்ய இரண்டு அரும்பொருள்களைக் கண்காட்சிக்குக் கொண்டு வந்து வைத்துள்ளார்கள்.

முதலாவது ஒரு கற்சிற்பம். இது ஜெர்மனியின் பெர்லின் அருங்காட்சியகத்தில் இருப்பது. அடுத்தது தன் பெயரை வழங்க விரும்பாத ஒரு தனி நபரின் கொடை; செப்புத் திருமேனியாக பாகுபலி. இரண்டு சிற்பங்களுமே மிக நுணுக்கமாக உருவாக்கப்பட்டவை. 12 அல்லது 13ம் நூற்றாண்டு கலைப்படைப்புகள்.

தமிழில் அச்சு வடிவில் வெளிவந்த முதல் பைபிள்:

ஜெர்மனியில் இருந்து சீர்திருத்த கிருத்துவத்தைப் பரவலாக்கம் செய்வதற்காகத் தமிழ்நாட்டில் ஜெர்மனியர்கள் வந்து இறங்கிய இடம் ஏற்கனவே டேனிஸ்காரர்கள் வந்து தங்கள் கோட்டையை அமைத்திருந்த தரங்கம்பாடி பகுதி. இப்பகுதியில் தங்கள் சமயப் பணியை தொடங்குவதற்காக வந்தவர்களில் முதன்மையானவர்கள் பாத்தலோமஸ் சீகன்பால்க் அவர்களும் பாதிரியார் ப்ளெட்சோ அவர்களும் ஆவார்.

1710 ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்து சேர்ந்த ஓர் அச்சு இயந்திரத்தை வைத்து ஓர் அச்சுக் கூடத்தை உருவாக்குகின்றார் பாதிரியார் சீகன்பால்க். இதில் உருவாக்கப்பட்டது தான் இந்த பைபிள்.

பைபிள் லத்தின் மொழியிலேயே இருக்க வேண்டும் என்ற பழமை வாதத்தை முறியடித்து மக்கள் பேசும் மொழியில் எல்லாம் சமய சிந்தனைகள் செல்ல வேண்டும் என்பதை முன்னெடுத்தது சீர்திருத்த கிருத்துவம். அந்த வகையில் 1714 ஆம் ஆண்டு இந்த பைபிள் அச்சு வடிவம் பெற்று வெளிவந்தது.

தமிழில் அச்சு வடிவில் வெளிவந்த முதல் பைபிள் என்ற பெருமை இந்த நூலுக்கு உண்டு.

இது ஜெர்மனி ஹாலே நகரில் உள்ள பிராங்க கல்விக்கூடத்தில் பாதுகாக்கப்படுவது. ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் அகம் புறம் கண்காட்சிக்காக ஆறு மாத காலம் இந்த பைபிள் பொதுமக்கள் பார்வைக்காக இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சீகன்பால்கு எழுதிய மொழிபெயர்ப்பு நூல்:

இந்த நூல் ஜெர்மனியில் இருந்து தமிழ்நாட்டின் தரங்கம்பாடிக்கு 1706 ஆம் ஆண்டு கடல்வழிப் பயணம் செய்து வந்த பாதிரியார் சீகன்பால் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தமிழ் மொழியைக் கற்று அவர் மிகவும் வியந்து கற்ற மூன்று பழந்தமிழ் அற நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழி பெயர்த்த ஒரு நூலாகும்.அவ்வையார் எழுதிய நீதி வெண்பா, கொன்றைவேந்தன், உலக நீதி ஆகிய மூன்று நூல்களையும் அவர் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து 1708 ஆம் ஆண்டு அதனைக் கையெழுத்துப் பிரதியாக உருவாக்கினார்.இந்த மாபெரும் பொக்கிஷம் ஜெர்மனி ஹாலே நகரில் உள்ள பிராங்க் கல்வி நிறுவனத்தில் பாதுகாக்கப்படுகிறது. தற்போது ஜெர்மனி ஸ்டுட்கார்டு நகரில் லிண்டன் அருங்காட்சியகத்தில் நடைபெறும் அகம் புறம் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் அரும்பொருட்களில் இதுவும் ஒன்று.தமிழராய்ப் பிறந்தாலும் தமிழ் எழுதப்படிக்கத் தெரியாது என சிரித்துக் கொண்டே கூச்சமின்றி கூறுபவர்கள், பாதிரியார் சீகன்பால் போன்ற பல ஐரோப்பியத் தமிழறிஞர்கள் சில ஆண்டுகளிலேயே தமிழ் மொழியைக் கற்றிருக்கின்றார்கள், அதன் பெருமையை மொழிபெயர்த்து தங்கள் நாடுகளில் பரவலாக்கியிருக்கின்றனர் என்பதை அறிந்தாவது ஊக்கம் பெறுவார்களா ?

கொடுந்தமிழ் இலக்கணம் – இலத்தீன் தமிழ் அகராதி:
இத்தாலிய கத்தோலிக்க சமய போதகரான பெஸ்கி (வீரமாமுனிவர்) பற்றி பலரும் அறிந்திருக்கின்றோம். அவர் எழுதிய நூல்கள் பற்றியும் கேள்விப்பட்டிருப்போம்; அவற்றுள் கொடுந்தமிழ் இலக்கணம் என்ற இந்த நூலும் ஒன்றாகும்.

வீரமாமுனிவர் இத்தாலியில் பிறந்தாலும் 1711 ஆம் ஆண்டு தென்னிந்தியா வந்த பிறகு தமிழ் மக்கள் வாழும் நிலத்திலேயே அவரது இறுதி நாள் வரை அதாவது 1747 வரை வாழ்ந்தார். தமிழை மிக ஆழமாகக் கற்று பல நூல்களை இயற்றியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

இந்தக் கொடுந்தமிழ் இலக்கண நூல் ஜெர்மனி நாட்டில் உள்ள ஹாலே நகரில் இயங்கி வரும் பிராங்க் கல்விக்கூடத்தில் பாதுகாக்கப்படுகிறது.

தரங்கம்பாடியில் சீர்திருத்தக் கிருத்துவ பாதிரிமார்கள் நடத்தி வந்த அச்சுக்கூடத்தில் இந்த நூல் அச்சுப்பதிப்பாக்கம் செய்யப்பட்டது. 1710 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் பாதிரியார் சீகன்பால்க் அவர்கள் இந்த அச்சுக் கூடத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரமாமுனிவர் அவர்கள் திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளையும் முதன் முதலில் லத்தின் மொழியில் மொழி பெயர்த்தவர் என்ற பெருமைக்குரியவர். திருக்குறளுக்கான முதல் மொழிபெயர்ப்பும் இதுவேயாகும்.

பேச்சுத் தமிழ் சொல் அகராதி என்ற வகையில் அமைந்திருக்கும் இந்த நூல் தென்னிந்தியாவிற்கு வருகை தந்த கத்தோலிக்க குருமார்களுக்கு மட்டுமின்றி சீர்திருத்தக் கிருத்துவ குருமார்களுக்கும் மற்றும் ஐரோப்பிய அரசின் அதிகாரிகளுக்கும் தமிழை அறிந்து கொள்ள ஒரு முக்கிய நூலாக அமைந்தது என்பது இந்த நூலின் சிறப்பாகும்.

கிருத்துவ தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள்:
ஐரோப்பியர்களால் கிறித்துவ மதம் இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழ் நிலத்தில் பரவிய பின்னர் உள்ளூர் பண்பாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கிய வகையில் புதிய மாற்றங்களுடன் தமிழ்நாட்டுக் கிருத்துவமாக புது வடிவம் எடுத்தது.

ஐரோப்பியக் கிறித்துவத்தில் சாதிகள் இல்லை; ஆனால் இந்தியாவில் சாதிகளை மீறி கிருத்துவத்தால் பரவ முடியவில்லை. சாதியை உள்வாங்கிக் கொண்டுதான் கிருத்துவம் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்று வரை தொடர்கிறது.

பண்பாட்டுக் கூறுகள் எனும் போது தமிழ் நிலத்தில் மக்கள் பயன்படுத்திய வழிபாட்டுப் பொருள்களிலும் சடங்குகளிலும் கிறித்துவக் கூறுகள் இணையத் தொடங்கிய பின்னர் புதிய படைப்புகள் உருவாகத் தொடங்கின. அந்த வகையில் மேரி மாதா உருவம் பதித்த குத்து விளக்குகள் கிருத்துவ மத சின்னம் பொறித்த திருமண தாலி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இங்கு நாம் காண்பது ஜெர்மனி லிண்டன் அருங்காட்சியகத்தில் அகம் புறம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கிருத்துவ தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்கள் என்ற தலைப்பில் அடங்கிய சில சேகரிப்புகளான சிறு விளக்கையும் தங்கத்தால் ஆன தாலியையும் இங்கே காணலாம்.

இவற்றை அருங்காட்சியகத்துக்காகத் தேடிச் சேகரித்து வழங்கியவர் தோழர் முனைவர் ஆனந்த் அமலதாஸ் அவர்கள்.

முனைவர் க.சுபாஷினி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like