Home Events மதுரையில் மரம் நடுதல், மூலிகைத் தோட்டம் அமைக்கும் விழா 

மதுரையில் மரம் நடுதல், மூலிகைத் தோட்டம் அமைக்கும் விழா 

by admin
0 comment

திருப்பாலை ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணியைத் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் முன்னெடுப்பில் விடுதிக்காப்பாளர் மு.சேகர் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை மதுரை மாவட்ட பொறுப்பாளர் சுலைகா பானு ஏற்பாட்டில் ஜூலை 13, 2023 அன்று  மரம் நடுதல் மூலிகைத் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது. தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நோக்கமாக மாணவர்களுக்கு இயற்கையோடு இணைந்த வாழ்கையை அறிமுகப்படுத்தும் ஒரு விழாவாக இப்பணி நடைபெற்றது. [காணொளி: https://youtu.be/RDVd3dOKqGI]

தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில் மூலிகைத் தோட்டம் அமைத்தல், காமராசர் பிறந்தநாள் விழா மற்றும் புதிய மாணவர்களை வரவேற்று பழைய மாணவர்களைப் பாராட்டுதல் என்ற முப்பெரும் விழாவானது 13.07.2023 வியாழனன்று மாலை திருப்பாலை ஆதிந விடுதியில் இனிதே நடைபெற்றது. நிகழ்வினை ஆதிந விடுதி காப்பாளர் திரு. சேகர் அவர்கள் ஒருங்கிணைத்துத் தொகுத்து வழங்க ஆதிந உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி க.சோலை அவர்கள் தலைமை தாங்கினார்.

தமிழ் மரபு அறக்கட்டளை மதுரைக் கிளையின் பொறுப்பாளர் திருமதி மு. சுலைகாபானு முன்னிலை வகித்தார். த.ம.அ உறுப்பினர்கள் திரு. ச. நஜுமுதீன் , திரு.ஆ. மோசஸ் பாக்கியராஜ் மற்றும் நமது அறக்கட்டளையின் பதிப்பகப் பிரிவின் பொறுப்பாளர் முனைவர் பாப்பா அவர்கள் நிகழ்விற்கு உறுதுணையாக இருந்தனர்.

மதுரைக் குழு உறுப்பினர்களான ஆசிரியர் திரு. சரவணக்குமார், திருமதி நித்யா சுப்ரமணியன், இவர்களுடன் சமூக ஆர்வலர் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி நிகழ்வினைச் சிறப்பித்தார். நிகழ்வின் தொடக்கமாக த.ம.அ. நிறுவனத் தலைவர் முனைவர் க.சுபாஷினி அவர்கள் ஜெர்மனியிலிருந்து அனுப்பிய வாழ்த்துரையை முனைவர் பாப்பா அவர்கள் வாசித்தார்கள்.

நல்லாசிரியையும் த.ம.அ. மதுரைக் கிளைப் பொறுப்பாளருமான மு. சுலைகாபானு த.ம.அ. பற்றிய சிறு அறிமுகத்துடன் இதுவரையிலும் தமிழ், தமிழர், பண்பாடு மற்றும் தொன்மைக்காக த.ம.அ. ஆற்றியுள்ள பணிகள் மற்றும் தொடர்ந்து அறக்கட்டளை ஆற்ற இருக்கின்ற பணிகள் குறித்தும் பேசினார். அவரைத் தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் சோலை அவர்கள் காமராசர் கல்விக்காகச் செய்த சேவைகள் மற்றும் மரங்களின் அவசியம் பற்றியும் பேச, அடுத்ததாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் வ. நேரு அவர்கள் மாணவர்களிடையே எழுச்சி மிகு தன்னம்பிக்கை உரையாற்றினார்.

த.ம.அ.உறுப்பினர் ஆ. மோசஸ் பாக்கியராஜ் அவர்கள் விதைகளுள்ள பென்சில்களைப் பரிசாக அளித்து தனது சூழலியல் பற்றி கருத்தினை அழகாகக் கொண்டு சென்றது சிறப்பாக அமைந்தது. தமிழ்நாடு ஆசிரியர் காப்பாளர் நலச் சங்கத்தின். மாவட்ட பொருளாளர் மூ. பாரதிராஜா. மாவட்ட அமைப்புச் செயலாளர் மூ. ராமகிருஷ்ணன். மாவட்ட பிரச்சார செயலாளர் சொ. சந்திரன், பல்கலை வித்தகரும் நல்லாசிரியருமான கணித பட்டதாரி ஆசிரியர் அ.ஷாஜஹான் , திரு காளீஸ்வரன் ஆகியோர் ஆதிந விடுதி மாணவர்களுடன் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். விழாவின் நிறைவாக விடுதி காப்பாளர் திரு சேகர் அவர்கள் நினைவுப் பரிசாக அனைவருக்கும் புத்தகங்களை வழங்கி மகிழ்ந்தார் .

மு. சுலைகா பானு,
த.ம.அ. மதுரைக் கிளைப் பொறுப்பாளர்.

பங்கேற்ற மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் நல்வாழ்த்துகள். நிகழ்ச்சியின் சில காட்சிகள்.

மதுரை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உங்கள் அரசுப் பள்ளிகளிலும் இத்தகைய இயற்கை அறிதல் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய விரும்பினால் மதுரைப் பொறுப்பாளர் திருமிகு. சுலைகாபானு அவர்களைத் தொடர்பு கொள்க.

You may also like