தமிழின் பாரம்பரிய சொத்துக்களைப் ஒலிவடிவில் சேகரிப்போம் – திட்ட அறிவிப்பு

சுபாஷினி கனகசுந்தரம்

தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் திட்டத்தை முன்வைத்து ஆரம்புக்கப்பட்டதுதான் தமிழ் மரபு அறக்கட்டளை. ஓலைச் சுவடிகள் மட்டுமன்றி அழிந்து விடும் நிலையிலிருக்கும் நூல்களையும் பாதுகாக்கும் திட்டத்தையும் இதனோடு சேர்த்துக் கொண்டு பல அரிய நூல்களை நமது வலைப்பக்கத்தில் சேர்த்திருக்கின்றோம். இந்த முயற்சி மேலும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இதனோடு நின்று விடாமல் ஓவியங்கள், இசை, கலை சம்பந்தப்பட்ட வித்தியாசமான ஆக்கங்கள் பலவற்றையும் மின்பதிவாக்கம் செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இதன் வரிசையில் இப்போது புதிதாக தமிழ் புத்தாண்டு அன்று ஒலி வடிவ செய்திகளை மின்பதிப்பாக்கம் செய்யும் ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டோம்.
மண்ணின் குரல் தொடங்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. இதுவரை, பொருள் நிறைந்த பயனுள்ள சுவாரசியமான பல ஆக்கங்கள் இந்த ஊடகத்தின் வழி பதிப்பாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இணையத் தொழில்நுடட்பத்தின் பரப்பு விரிந்தது. அதன் துணைகொண்டு தமிழில் ஆக்கப்படுத்தக்கூடிய விஷயங்கள் பல. இந்த வளர்ச்சியை, அதனால் பெறக்கூடிய பலனை எண்ணும் போது இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு மிக முக்கிய, தமிழ் மொழியிலான அறிய பல தகவல்களைச், செய்திகளை நமது பாரம்பரிய விஷயங்களை பாதுகாப்பது மிக சுலபம் என்பதில் சிறுதும் சந்தேகமில்லை. இதை கருத்தில் கொண்டு தமிழ் மரபு அறக்கட்டளை அதன் நோக்கத்தில் இந்த வருடம் மேலும் விரிவு காணும் வகையில் செயல்பட விழைந்துள்ளது.

இந்த வகையில் தமிழில் தொன்மையான, பாரம்பரியம், கலை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட வாய்மொழி செய்திகளை, mp3 கோப்புகளாக சேகரிப்பதற்கான திட்டத்தை இப்போது செயல்படுத்த ஆரம்பித்துள்ளோம் என்ற தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். தமிழ் மொழியின் பாரம்பரிய சொத்துக்களாகக் கருதப்படக் கூடியவை கிராமிய மண்ணில் உயிர் பெற்ற வாய்மொழிச் செய்திகள். நாட்டார் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், சிறுவர் கதைகள், கிராமியப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், கிராம வரலாறு, கிரமத்துக் கதை, கிராமப் பெரியவர்கள் வரலாறு, சிறுதெய்வ வழிபாட்டுக் கதைகள், சிறு தெய்வ வழிபாட்டு முறைகள், இப்படிப் பல விஷயங்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை இழந்து வரும் நிலையிலிருப்பதை மறுக்க முடியாது.

இவை மின்பதிப்பாக்கம் செய்யப்பட வேண்டும். இதுவே இப்போது த.ம.அ. புதிய திட்டம். இந்த திட்டத்தில் ஈடுபட கணினி, ஒரு சிறிய mp3 recorder மட்டுமே தொழில்நுட்ப ரீதியில் தேவை. இதற்கும் மேலாக இந்த திட்டத்தில் தமிழுக்காக உழைக்கும் ஆர்வமும் மணப்பான்மையும் முக்கியம்.
நண்பர்களே, உங்கள் அண்மையில், சுற்றத்தார் மத்தியில், நண்பர்கள் வட்டாரத்தில் இம்மாதிரியான செய்திகளை அறிந்தோர், திறமைகளை உள்ளோர் இருப்பின் தயங்காமல் மின் தமிழில் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் இவ்வகை வாழ்மொழிச் செய்திகளை mp3 கோப்புக்களாக பதிவு செய்து அனுப்பி வைக்கலாம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல் வழி தெரியப்படுத்தலாம். இப்பபடித் தெரியப்படுத்துவதன் வழி தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்டக்குழுவினர் உங்களைத் தொடர்பு கொண்டு இவ்விஷயங்களைப் பதிவாக்கம் செய்ய முடியும். இது ஒரு கூட்டுத் திட்டம். இது வெற்றியடைய தமிழர் அனைவரின் ஒத்துழைப்பும் நிச்சயம் தேவை.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *