சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைகிறது!

வியாழக்கிழமை, ஜூலை 10, 2008

திருச்சி: சிங்கப்பூரில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆசிய மொழிகளின் பண்பாட்டு துறைப் பேராசிரியர் ஆ.ரா. சிவக்குமாரன்.

திருச்சி தேசியக் கல்லூரியில் தத்துவப் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அவர் பேசியது:

“உலக வரைபடத்தில் சிங்கப்பூர் ஒரு சிறு புள்ளிபோல் காட்சியளித்தாலும், உலக நாடுகள் மத்தியில் அனைத்து துறைகளிலும் உயர்ந்து பெரும் புள்ளியாகவே உள்ளது.

சிங்கப்பூரின் அபார வளர்ச்சிக்கான காரணத்தில் முக்கியமானது அரசியல் பின்னணி, மக்களின் கடின உழைப்பு, சரியான சட்டங்கள்தான்.

சிங்கப்பூரில் இயற்கை வளங்கள் கிடையாது. தண்ணீர் கூட மலேசியாவில் இருந்துதான் விலைக்கு வாங்கப்படுகிறது. ஆனால், அதே தண்ணீரை சுத்தம் செய்து மலேசியாவுக்கே திரும்பி விற்கின்றனர்.

சிங்கப்பூரில் 77 சதவிகித சீனர்களும், 14 சதவிகித மலாய்களும், 8 சதவிகித இந்தியர்களும் உள்ளனர். 8 சதவிகித இந்தியர்களில் 65 சதம் பேர் தமிழர்கள்.

தமிழையும் ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு பல்வேறு வசதிகளை அங்குள்ள அரசு செய்து வருகிறது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் தமிழ் மொழியைப் பேசினால் ஏதோ தரம் குறைந்தவர்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவதால், ஆங்கிலத்திலேயே பேசி வருகின்றனர். குழந்தைகளும் வீட்டில் ஆங்கிலத்தில் பேசி வருவதால் எதிர்காலத்தில் தமிழ்மொழி வழக்கற்றுப் போகும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழை தெளிவாக பேச குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். தமிழில் பேச கூச்சப்படுவதால் வாய்மொழித் தேர்வில் அவர்கள் குறைவான மதிப்பெண்களையே பெறுகின்றனர்.

தமிழ் பண்பாடு சிங்கப்பூரில் தமிழ்நாட்டைப்போல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள செண்பகவிநாயகர் கோயிலில் ஞாயிறு பள்ளி நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு தமிழும், சைவமும் கற்பிக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணமே, அங்குள்ள மக்கள் சட்டத்தை மதிப்பதுதான். சட்டத்தை மதிக்காதவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருமுறை தவறு செய்தவர்கள், மறுமுறை தவறு செய்யும் போது தண்டனை மேலும் அதிகரிக்கப்படும். சாதாரன குடிமகன் முதல் அரசு பதவிகளில் இருப்பவர்கள் வரை யாருக்கும் பாகுபாடு கிடையாது. அனைவருக்கும் தண்டனை ஒன்றே.

தமிழகத்தைப் போல் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களிடையே ஜாதிப் பிரிவுகள் கிடையாது. பெரும்பாலான திருமணங்கள் கலப்பு திருமணங்களே. ஜாதியால் தனித்து இயங்கும் நிலை இல்லை.

தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கியது போல் தற்போது ஹிந்திக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து கேட்டு வருகின்றனர். இதனால் தமிழ் மொழிக்கான அரசின் சலுகை ஏதும் குறைந்து விடப்வதில்லை.

தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்ற தமிழாசிரியர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர். மொழி, கலாசாரம், பண்பாடு என அரசு எதற்கும் வேறுபாடு காட்டுவது கிடையாது’ என்றார் சிவக்குமாரன்.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கே. அன்பரசு, தத்துவப் பேரவை துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source: ThatsTamil

மின்தமிழ் இடுகை: நாக.இளங்கோவன்

You may also like...

1 Response

  1. -L-L-D-a-s-u says:

    ஆம் . தமிழர்களின் சதவிகிதம் குறைகிறது .

    பல தமிழ் நிகழ்ச்சிகளின் பெயர்களில் தீபாவளி அன்று வைக்கும் தட்டிகளில் சமீபகாலமாக ஹிந்தி இடம்பெற்று வருகிறது .

    சாதி இங்கு இல்லை என்பது முற்றிலும் உண்மை இல்லை . செட்டியார் சங்கமெல்லாம் உண்டு .

    இந்தியாவிலிருந்து வருகின்றவர்கள் தங்கள் சாதி கலாச்சாரத்தை இங்கு திணிப்பதாகவும், சாதீய ரீதியான கண்ணோட்டதில் இங்குள்ள தமிழரை மதிப்பதில்லை என்றும் முன்னால் பிரதமர் சமீபத்தில் குற்றம் சாட்டினார் . உண்மை தான் .,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *