மண்ணின் குரல்: பிப்ரவரி 2019 – மதுரை ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் கோயில் பௌத்த தொடர்புகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமண சமயத்தவர் போற்றும் தீர்த்தங்கரர் சிற்பங்களும் புத்தரின் சிற்ப வடிவங்களும் திறந்த வெளிகளிலும், புதர்களிலும், காட்டுப் பகுதிகளிலும் பாதுகாப்பின்றி இருப்பதைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது செய்தி ஊடகங்களின் வழி காண்கின்றோம். வரலாற்று ஆர்வலர்கள் சிலரது முயற்சிகளினாலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது நமக்கு தெரியவருகின்றன.  இத்தகைய சமண பௌத்த வடிவங்களில் சில உள்ளூர் மக்களாலேயே கோயிலாக எழுப்பப்பட்டு வழிபாட்டில் இடம்பெறுகின்றன. அப்படி கிடைத்த சில சிலைகளை மக்கள் போற்றி  பேராதரவு வழங்கி வழிபடும் போது , சிறிய கோயிலாக உருவாகி, பின்   அக்கோயில்கள் பெரிய கோயில்களாக வளர்கின்றன.சில கோயில்கள் மக்களின் குலதெய்வங்களாகவும் வழிபாட்டில் இடம்பெறத் தொடங்கிவிடுகின்றன.
இந்த வகையில் புத்தரின் சிலைகள் பல இடங்களில் கிராமங்களில் மக்களால் சாமியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் குலதெய்வங்களாக மாற்றம் கண்டுள்ள நிகழ்வுகளைக் காண்கின்றோம்.இந்த வகையில் மதுரையில் இன்று பிரசித்தி பெற்று வழிபாட்டில் இடம்பெறும் ஸ்ரீபாண்டி முனீஸ்வரர் ஆலயம் அடிப்படையில் ஒரு புத்தரின் சிற்பமாகவே ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது.
இன்று இக்கோயில் மதுரை மாநகர் மட்டுமன்றி தமிழகம் முழுமைக்கும் புகழ்பெற்ற ஒரு பெருங்கோயிலாக வளர்ச்சி கண்டுள்ளது.
இக்கோயிலின் மூலப்பிரகாரத்தின் உள்ளே மலர்களால் நிறைத்து கிரீட அலங்காரத்துடன் திகழும் முனீஸ்வரராக இத்தெய்வச் சிற்பம் காட்சியளிக்கின்றது. கோயிலைச் சுற்றியுள்ள வளாகத்தில் கடைவீதி அமைந்துள்ளது. பொதுமக்கள் வந்து தாங்களே பூசையைச் செய்து வழிபடும் வகையில் கருப்பண்ணசாமி சன்னதியும் இங்குள்ளது.
கோயிலுக்கு வரும் பொதுமக்களில் சிலர் அருள் வந்து குறி சொல்வதும் அவர்களோடு வரும் குடும்பத்தினர் வாக்கு கேட்பதும் இங்கு மிக இயல்பாக அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளே.
அத்தகைய நிகழ்வுகளையும் இக்கோயிலுக்கு உள்ள பௌத்த தொடர்புகளையும் விளக்கும் தொல்லியல் அறிஞர் முனைவர்.சாந்தலிங்கம் அவர்களது விளக்கத்தையும் தாங்கி வருகின்றது இப்பதிவு.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *