தமிழ் மரபு அறக்கட்டளையின் இணையவழி உரைத்தொடரில் பங்களித்தோர் அனைவருக்கும் நன்றி

கடந்த இரண்டு மாதங்களாக, ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி தொடர்ச்சியாக நாம் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது ஒரு சொற்பொழிவு என்ற வகையில் இதுவரை 103 ஃபேஸ்புக் நேரலை உரை நிகழ்ச்சிகளை நிறைவு செய்திருக்கின்றோம். அவற்றுள் ஏறக்குறைய 90 உரைகள் துறைசார்ந்த, உயர் தரம் வாய்ந்த உரைகளாக. ஆய்வாளர்கள் கேட்டுப் பயன் பெறத்தக்க தரம் கொண்ட உரைகளாக அமைந்திருக்கின்றன என்பது நாம் அனைவரும் பெருமை கொள்ளத்தக்க ஒரு சாதனை எனக் கருதுகிறேன்.

இந்த கொரோனா சோதனை காலத்தில் இத்தகைய சாதனையை நாம் உருவாக்க தொழில்நுட்ப துறையில் மட்டுமன்றி பேச்சாளர் ஏற்பாடுகளிலும் என்னுடன் இணைந்து கொண்டு முற்றும் முழுவதுமாகச் செயல்பட்ட சகோதரர் விவேகானந்தன் அவர்களுக்கும், அனைத்து வீடியோ பதிவுகளையும் உடனுக்குடன் சிறப்புடன் தயாரித்து அதேநாளில் வெளியிட்டு அனைத்து உரைகளையும் ஆவணப்படுத்திய நமது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் செயலாளர் டாக்டர் தேமொழி அவர்களுக்கு, பல்வேறு வகையில் உடனிருந்து துணைபுரிந்த க்ரிஷ் அவர்களுக்கும் எனது தனிப்பட்ட நன்றியினை நான் பதிய விரும்புகிறேன்.

இதே காலகட்டத்தில் மே 19ம் தேதி தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை – தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக் கழகத்தையும் (Kadigai -THFi Virtual Academy of Excellence) தொடக்கினோம்.

இந்தச் சாதனைக்கு பின் இருப்பது சாதாரண உழைப்பு அல்ல என்பது இத்தகைய நிகழ்ச்சிகளை மாதம் ஒருமுறை ஏற்பாடு செய்பவர்கள் கூட அறிந்திருப்பார்கள். ஆனால் நாம் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை என சொற்பொழிவுகளை ஏற்பாடு செய்து தமிழ் மொழி மற்றும் வரலாற்று ஆய்வில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இவற்றை வழங்கி இருக்கின்றோம்; முக்கிய ஆய்வுத் தகவல்களை ஆவணப்படுத்தி இருக்கின்றோம்.

நேரலையில் உரைகளைத் தவறவிட்டவர்கள் https://www.youtube.com/thfi-channel என்ற பகுதியிலிருந்து அனைத்து ஆய்வுரைகளையும் கேட்டுப் பயன்பெறலாம்.

இந்த முயற்சியில் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து பேச்சாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும், இணைய ஒலிபரப்பு நல்கிய தமிழ்ப்பண்பலை வானொலிக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
முனைவர் க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *