Home THFi News தொல்புரம் கலாலயம் நாடக மன்றம்

தொல்புரம் கலாலயம் நாடக மன்றம்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை காணொளி வெளியீடு
தொல்புரம் கலாலயம் நாடக மன்றம்
காணொளி: https://youtu.be/z4EamFAM3qY

யாழில் முத்தமிழ் விழா: மே 21, 2023 அன்று யாழ்ப்பாணப் பெட்டகம் நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு முப்பெருந்தமிழ்விழா இடம்பெற்றது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இந்த முப்பெருந்தமிழ்விழா இடம்பெற்றது. நிகழ்ச்சியில் தொல்புரம் கலாலயம் நாடக மன்றம் குழுவினரின் நாடகம் ஒன்றும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷிணி அவர்களுடன் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான முனைவர் மு.இறைவாணி, முனைவர் மு.பாமா ஆகியோரும் கலந்துகொண்டனர். இவர்கள் இருவரும் தொல்புரம் கலாலயம் நாடக மன்றம் குழுவினரிடம் நிகழ்த்திய நேர்காணல் இக்காணொளியில் இடம் பெறுகிறது.

தொல்புரம் கலாலயம் நாடக மன்றம்
காணொளி: https://youtu.be/z4EamFAM3qY

அனைவருக்கும் வணக்கம்.

தொல்புரம் கலாலயம் நாடக மன்றம் நடத்திய ‘தாய் கண்ட சேய்’ இசை நாடகத்தின் விமர்சனம்:
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற முப்பெரும் தமிழ் விழா 2023-வில் திரு உதயச்சந்திரன் குழுவினர் இயக்கிய தாய் கண்ட சேய் இசை நாடகத்தை மே 21, 2023 அன்று மாலையில் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு திரு அருள்சந்திரன் மற்றும் முனைவர் சுபாஷிணி அவர்களால் எனக்குக் கிடைத்தது

வெகு காலம் ஆகிவிட்டது இசை நாடகத்தைக் கண்டு. மதுரையில் திருவிழாக்களில் கண்டதாக நினைவு… சென்னைக்கு வந்து 18 வருடங்களான பின் யாழ்ப்பாணத்தில் இத்தகைய ஒரு நாடகத்தைக் காணும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.

இந்த நாடகத்தில் மகாபாரதத்தின் மூன்று காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. கர்ணன் தனது தாயைப் பற்றித் தெரியாமல் எப்படித் தவிக்கிறார், கிருஷ்ணன் மூலம் எப்படித் தெரிந்து கொள்கிறார், குந்திதேவியிடம் கர்ணன் தான் நீ பெற்றெடுத்த முதல் குழந்தை என்னும் உண்மையைக் கூறி, குந்தி தேவியார் தான் பெற்ற பாண்டவர்களைக் காப்பாற்ற என்ன வரங்கள் கர்ணனிடம் பெற வேண்டும் என்று கிருஷ்ணன் அறிவுரை கூறும் காட்சியையும், குந்தி தேவியும் கர்ணனும் சந்திக்கும் நிகழ்வும் காட்சி அமைக்கப்பட்டது.

கர்ணன் வேடத்தில் திரு உதயச்சந்திரன் அவர்கள் நடித்திருந்தார். நாடகக் குழுவினர் பயன்படுத்திய உடைகள் அலங்காரங்கள் வசனங்கள் எல்லாம் அற்புதம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த கர்ணன் திரைப்படம் கண்முன்னே வந்து நின்றது. உதயச்சந்திரன் அண்ணன் அவர்களும் நவாலியின் சிவாஜியாகவே எங்களுக்குக் காட்சியளித்தார். கிருஷ்ணனின் கதாபாத்திரத்தில் என்டி ராமராவ் போலவே மா. நித்தியாந்தன் அண்ணன் நடித்திருந்தார். வசனங்களைக் கூறுவதில் ஒருவருக்கு ஒருவர் சலித்தவர் இல்லை என்று நமது சிவாஜியும் என்டி ராமராவும் போட்டிப் போட்டுக் கொண்டனர். இதற்கு இடையில் குந்தி கதாபாத்திரமாக நடித்த த.ரவீந்திரன் அண்ணன் குந்தியாகவே மாறிவிட்டார். ஒரு தாய்க்கு இருக்கும் பாசப் போராட்டத்தைத் தத்ரூபமாக நடித்துக் காட்டினார். இவர்கள் மூவரும் மேடையிலேயே வசனம் பேசினார்கள், பாடினார்கள், நடிப்பில் அனைவரையும் கவர்ந்து கட்டிப்போட்டு வைத்திருந்தார்கள்.

இந்தக் குழுவினர் 2011 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறார்கள். வருடம் தோறும் ஒரு இதிகாச நாடகத்தினை தயாரித்து இயக்கி பொன்னாலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் பதினாறாம் நாள் திருவிழாவில் அரங்கேற்றுகிறார்கள். சமூக விழிப்புணர்வு சார்ந்த நாடகங்களையும் நடத்தி வருகிறார்கள்.

இவர்களின் நாடகக் கலை மேன்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள், இவர்கள் அனைவரும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும் மகிழ்வோடும் இருக்க வேண்டும் என ஆசை கொள்கிறேன்.

மு. பாமா
தமிழ் மரபு அறக்கட்டளை

You may also like