Home Books பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

பிராங்க்பர்ட் புத்தகக் காட்சி ஐரோப்பா வாழ் தமிழர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்

by admin
0 comment

அக்டோபர் 22, 2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெர்மனியில் முடிவடைந்த தமிழ்ப் புத்தகக் கண்காட்சியில் தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்ற நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் என்னை அழைத்திருந்தார்கள். நான் ஜெர்மனிக்கு பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் நண்பர்கள் சிலரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்.

ஜெர்மனிக்கு வந்த காலம் தொட்டு இங்கு ஒரு புத்தகக் கண்காட்சி… குறிப்பாகத் தமிழ் நூல்களுக்காக நடக்காதா என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருந்ததுண்டு. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு பயணம் முடித்து ஜெர்மனிக்குத் திரும்பும் போது தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் சிலவற்றைக் கொண்டு வந்து இங்கு தேவைப்படும் நண்பர்களுக்கு அவற்றை நான் பகிர்ந்து கொள்வதுண்டு. ஏனெனில் அடிக்கடி இந்தியா சென்று அவர்கள் நல்ல நூல்களை வாங்க முடியாத ஒரு சூழல் ஏற்படுவதை நினைத்து இவ்வகையான ஏற்பாடுகளை நான் செய்வது உண்டு. பல்வேறு பதிப்பகத்தார் தமிழ்நாடு இலங்கை பகுதிகளிலிருந்து அவர்களது நூல்களை வாசிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் ஐரோப்பாவில் புத்தகக் கண்காட்சி என்பது கட்டாயத் தேவை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்த அரும்பெரும் முயற்சியை ஏற்று நடத்தி வரும் லண்டன் வாழ் தமிழர் ஃபவுசர் அவர்களையும் மற்றும் அவரது குழுவினரையும் பாராட்டுவது அவசியம். அவரது முயற்சிகளுக்குக் கை கொடுக்க வேண்டியதும் அவசியம். சில வாரங்களுக்கு முன்பு சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது அங்கு சந்தித்த நெடுநாள் நண்பர் சதீஷ் வழியாக தோழர் ஃபவுசர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் என்னை சில ஆண்டுகளாகத் தொடர்பு கொள்ள வேண்டும் என முயற்சி செய்தாலும் என்னைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது என்று அப்போதுதான் அறிந்து கொண்டேன். இப்படிப் பல வேலைகளில் நிகழ்ந்து போவதுண்டு.

இந்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் நார்வே நாட்டில் ஓஸ்லோவில் வசிக்கின்ற தோழர் முருகையா வேலழகன் அவர்கள் உதவியுடன் ஓஸ்லோ நகரத்தில் தமிழ் மரபு அறக்கட்டளை நூல்களை வைத்து புத்தக விற்பனை கண்காட்சி ஒன்றைச் சிறிய அளவில் செய்து முடித்தோம். இப்படி ஐரோப்பாவில் தற்சமயம் அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தகக் கண்காட்சிகள் வரத் தொடங்கி இருப்பது பெரு மகிழ்ச்சி. தோழர் ஃபவுசர் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் தன்னால் இயன்ற அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ஐரோப்பாவின் பல இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக எனக்குத் தெரிவித்தார். இத்தகைய நூல் கண்காட்சிகள் பெரிய விளம்பரத்துடனும் நிறைய பேர் பங்கு கொள்ளும் வகையிலும் இனி நடைபெற வேண்டும்.

ஐரோப்பாவில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் உள்ளனர். ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள். இங்கு வாழும் தமிழ் மக்களுக்குத் தமிழ் நூல்கள் கண்காட்சி ஒரு வரப்பிரசாதம் என்பதை ஐரோப்பா வாழ் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் நூல் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வது என்பது எளிதல்ல என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். தோழர் ஃபவுசர் போன்றோர்களது முயற்சிகளுக்கு நாம் முழுமையான ஆதரவை அளிக்க வேண்டும். ஐரோப்பாவெங்கும் தமிழ்ப் புத்தகக் கண்காட்சிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும்.

யாராவது சினிமா நடிகர்கள் வந்தாலும் சரி இசையமைப்பாளர்கள் வந்தாலும் சரி இங்கு எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. அந்த அளவிற்கு சினிமா மோகம் தமிழர்கள் மத்தியில் நிறைந்து இருக்கின்றது. ஆனால் தங்கள் சமூக மேம்பாட்டிற்காக, தங்கள் சுய கற்றலுக்காக நடைபெறுகின்ற தமிழ் நூல் கண்காட்சிகளைப் பற்றி இங்கு ஐரோப்பாவில் வாழ்கின்ற மிகப் பெரும்பான்மையான தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள முயல்வதும் இல்லை.. ஆர்வம் காட்டுவதும் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய நிலை.

ஐரோப்பியத் தமிழர்கள் தமிழ் நூல் கண்காட்சிகளுக்குத் தங்கள் ஆதரவை வழங்கத் தயாராக வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கின்றேன். இது ஐரோப்பாவில் தமிழ் மக்களது தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது தொடர்ச்சியான கற்றலுக்கும் அடிப்படை வகுத்துக் கொடுக்கும்.

முனைவர் க. சுபாஷிணி

You may also like