Home Heritage Tour மதுரை மரபுப்பயணம்: நரசிங்கம்பட்டி ஈமக்காடு  மற்றும் சித்திர சாவடி ஓவியங்கள்

மதுரை மரபுப்பயணம்: நரசிங்கம்பட்டி ஈமக்காடு  மற்றும் சித்திர சாவடி ஓவியங்கள்

by admin
0 comment

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மதுரைக் கிளையின் ஒருங்கிணைப்பில் நரசிங்கம்பட்டி ஈமக்காடு (புவியிடக் குறிப்பு: 10.0102, 78.26616) மற்றும் சித்திர சாவடி ஓவியங்கள் ஆகியனவற்றைப் பார்வையிட அக்டோபர் 22, 2023 ஞாயிற்றுக் கிழமை  அன்று தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் மரபுப்பயணம் மேற்கொண்டனர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இடம் நரசிங்கம்பட்டி. இங்கு கல்திட்டை, கல்வட்டம், குத்துக்கல், தாழி என்று முன்னோர்களைப் புதைத்து வைக்கப்பட்ட ஈமக்காடு உள்ளது. இறந்தவர்களை அவர்கள் பயன்படுத்திய சில முக்கியமான பொருள்களுடன் புதைத்து, அதற்கு மேலாக கற்களைக் கொண்டு வட்டமாகவோ, திட்டை போன்றோ, குத்துக்கல்லோ ஏற்படுத்தி இருப்பார்கள். இவ்வாறான ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்திட்டைகள் குத்து கற்கள் பல அழிந்தும் சில பார்க்கக் கூடிய நிலையிலும் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஈமக்காடுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த நரசிங்கம்பட்டி ஈமக்காடு. இதன் இருப்பிடம்; மதுரை மேலூர் சாலையில் நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரம்.

நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் பல சாவடிகளை ஏற்படுத்தப் பட்டன. அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுவது மதுரை மாவட்டத்தில் இருக்கும் நரசிங்கம்பட்டி சித்திரச் சாவடி. இச்சாவடி கல் தூண்களால் ஆன சாவடி. சாவடியின் உட்புற சுவரில் இராமாயண காட்சிகளை வண்ண ஓவியங்களாகத் தீட்டி உள்ளனர். பல நூறு ஆண்டுகளாக இராமாயண கதையினை வருபவர்களுக்குக் காட்சிப் படுத்திக் கொண்டு இருந்த சித்திர சாவடியானது இப்பொழுது மேற்கூரை முழுவதுமாக இடிந்து சுற்றுச்சுவர்ப் பகுதி மட்டும் உள்ள நிலையில் காணப்படுகிறது. சாவடியின் மையப் பகுதியில் உள்ள உட்புற சுவரில் காணப்பட்ட சித்திரங்களும் மழை நீரினால் சுத்தமாக அழிந்து விட்டன. பக்கவாட்டு சுவரில் மட்டும் சில ஓவியங்கள் தெரிகிறது. எஞ்சி இருக்கும் இந்த சித்திரங்களைப் பாதுகாக்க பல்வேறு அமைப்பினர்கள் முயற்சி செய்தும் இன்றுவரை அதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை. மதுரைக்குப் பெருமை சேர்க்கும் இந்த சித்திர சாவடியில் உள்ள சித்திரங்களைப் பாதுகாப்பதற்கு தமிழக தொல்லியல் துறை ஆவண செய்ய வேண்டும்.

முனைவர் ப தேவி அறிவுசெல்வம்
தமிழ் மரபு அறக்கட்டளை பணநாடு அமைப்பு, மதுரைக்கிளை

You may also like