Home Events அயலகத் தமிழர் நாள் 2024 -முனைவர் க. சுபாஷிணி உரை

அயலகத் தமிழர் நாள் 2024 -முனைவர் க. சுபாஷிணி உரை

by admin
0 comment

உரை காணொளியாக: https://youtu.be/EP24Blk25fI

தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள்

— முனைவர் க. சுபாஷிணி

அயலகத் தமிழர் நாள் 2024 – அமர்வு 1
உரையாளர்: முனைவர்.க.சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

தமிழின் தொன்மையை உறுதி செய்யும் சான்றுகள்

தொன்மையான மொழிகள் பல இருந்தாலும் ஒரு மொழியின் தொடர்ச்சியில் தான் அதன் உயிர்த்தன்மை இருக்கின்றது. தொன்மைத் தன்மையைக் கொண்டிருந்தாலும் புழக்கத்தில் இல்லாத, பேச்சு வழக்கில் இல்லாது மறைந்து போன மொழிகள் பல. இவற்றுள் தொடர்ச்சியும் வளர்ச்சியும் கொண்ட மொழியாகவும் பல புதிய சொல்வளங்களையும் உள்வாங்கிக்கொண்டு வளர்ந்த ஒரு மொழியாகவும் நமது தாய்மொழி தமிழ் திகழ்கின்றது.

தமிழ் தொன்மையான ஒரு மொழி என்பதை உறுதி செய்ய இலக்கியம், இலக்கணம், தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள் உதவுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ள மரபணுவியல் ஆய்வுகளும் இதற்குத் துணைபுரியக்கூடிய பெரும் வாய்ப்புள்ளது.

தமிழ் மொழி தொன்மையானது மட்டுமல்ல; அது தனித்துவம் மிக்க ஒரு மொழியாகவும் திகழ்கின்றது. தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான திருக்குறளும், தமிழ் இலக்கணமான தொல்காப்பியமும் பொருளதிகாரத்தைப் பற்றி உரைக்கின்றன. இலக்கியமும் இலக்கணமும் கண்ணுக்குத் தெரியாத கடவுள் கொள்கையை விளக்குவதை நோக்கமாகக் கொள்ளாமல் மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, வணிகம், பொருளாதாரம், கலை, காதல், அன்பு என்பனவற்றைப் பேசுவது தான் தமிழின் தனிச் சிறப்பு.

திணை சார்ந்த வாழ்வியலை விளக்கும் தமிழின் தொல் இலக்கியங்களான சங்கத்தமிழ் செய்யுட்கள். சூழலியல், இயற்கை, வாழ்விடங்கள், தொழிற்கூடங்கள், வணிகம், ஆகியவற்றோடு திணைக்கான கடவுள்களையும் படைத்து நம்மைத் தொடர்ந்து உயிர்ப்போடு விவாதிக்க உதவுகின்றன.

ஒரு மொழியின் சிறப்பு என்பது அதன் தொன்மையிலும் தொடர்ச்சியிலும் இருப்பது போல அதன் தனித்தன்மையிலும் இருக்கின்றது.

இந்தியத் துணைக்கண்டத்தின் மிகப் பழமையான தொல்லியல் களமாக இருப்பது மொகஞ்சதாரோ-ஹரப்பா தொல்லியல் களம். அந்த நாகரிகம் முற்றும் முழுதுமாக அழிந்து போயிருக்க வாய்ப்பில்லை. கடற்பகுதியை ஒட்டிய நிலப்பரப்பில் அமைந்து மலைப்பகுதிகள் சூழ்ந்த இப்பகுதி பாதிப்புக்குள்ளான காலகட்டத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் பல பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றனர். அவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் தெற்குப் பகுதியில் நகர்ந்து வந்து குடிபெயர்ந்திருக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம். ஹரப்பா நாகரிகத்து மக்கள் உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தனர். உயர்தரமான வணிக அளவைகளைப் பயன்படுத்தினர். மற்றொரு பண்டைய நாகரிகமான சுமேரியர்களுடன் வணிகத் தொடர்பில் இருந்தனர். வீடுகளையும் தொழிற்கூடங்களையும் கட்டி நாகரிக வாழ்க்கை வாழ்ந்தனர். அதே நாகரிகத்தின் சாயலை நமக்குக் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள், அவர்களது மொழி, பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவை மறைந்து அழிந்து விடவில்லை; மாறாக அவை தொன்மையின் தொடர்ச்சியாக சிந்து வெளிப் பகுதியிலிருந்து வெளியேறிய மக்களின் பண்பாட்டுக் கூறுகளாகத் தொடர்கின்றன.

மொகஞ்சதாரோ – ஹரப்பா மக்கள் தங்கள் பண்பாட்டுக் கூறுகளைத் தங்களின் புலம்பெயர்வுகளின் போது உடன் கொண்டு சென்றனர். இன்று வணிகத்துக்காகவும், ஒப்பந்தக் கூலிகளாகவும் மேற்கிந்திய நாடுகளான கயானா, சுரினாம், ட்ரினிடாட் போன்ற நாடுகளுக்கும், பிரெஞ்சு கரீபியத் தீவுகளான மார்த்தினிக், குவாதலப், செயிண்ட் லூசியா தீவுகளுக்கும், மொரிஷியஸ், ரீயூனியன், ஆப்பிரிக்க நாடுகள், இலங்கை, மலாயா, இந்தோனீசியா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த மக்கள் மாரியம்மனையும் பொங்கலையும் கொண்டு சென்றதனால் இன்று இப்பகுதிகளில் தமிழர் பண்பாட்டுக் கூறுகளின் பரவலாக்கத்தைக் காண்கின்றோம்.

அதே போல இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் சிந்துவெளியிலிருந்து தென்னிந்தியப் பகுதிக்குப் புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் பண்பாட்டையும் மொழியின் தொடர்ச்சியையும் கொண்டு சென்றனர். ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுவது போல சிந்துவெளியின் தொடர்ச்சியே தமிழ் நிலத்தின் பண்பாடாக வளர்ச்சி கண்டுள்ளது என்பதை இன்றைய அனைத்து ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. சிந்து வெளியின் பண்பாட்டு நினைவுகளே சங்கத் தமிழ் இலக்கியங்களாக மிளிர்கின்றன.

இந்திய மொழிகளில் முதன் முதலில் செம்மொழி தகுதி பெற்ற மொழி தமிழ், இதன் வேர்களை மட்டுமல்ல அதன் விழுதுகளையும் நாம் கொண்டாட வேண்டும். தமிழ்மொழி புதுமைகளை உட்புகுத்திக் கொண்டு காலத்திற்கேற்ற வகையில் வளர்ச்சி கண்டுவரும் மொழி. இன்று கணினி, இணையம் என தொழில்நுட்பம் துரித வளர்ச்சி கண்டுவரும் இக்காலத்தில் உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற இளம் தலைமுறையினரும் பேரார்வத்துடன் சமூக ஊடகங்களில் தமிழ் மொழியில் கலந்துரையாடுகின்றனர். திருக்குறள் உலகத் தமிழர்களை ஒற்றை அடையாளமாக ஒன்றிணைக்கின்றது.

புலம் பெயர்ந்த அயலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் தமிழ்நாடு அரசின் முயற்சிகள் எங்களுக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அதற்காகத் தமிழ்நாடு முதல்வருக்கும் துறைசார்ந்த அமைச்சர் பெருமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளும் இந்நேரத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் அயல் நாட்டவர்களுக்கும் நமது பண்டைய தொன்மங்களை நவீனத் தொழில் நுட்பங்களின் துணையுடன் அறிமுகம் செய்வதின் மூலமான உலகளாவிய உரையாடலை நாம் உருவாக்க முடியும். அயலகத் தமிழர்களின் வாரிசுகள் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும் மறக்காமல் தொடர்வதற்கு அவை உதவி புரியும். அதற்குத் தமிழ்நாட்டு அருங்காட்சியகங்கள் அனைத்தையும் ஓர் இணைய ஊடக பன்னாட்டாக்கம் செய்ய வேண்டும். நீண்டகால வணிகத் தொடர்புகளால் தமிழ் மொழியின் சொல் வளங்கள் உலக மொழிகள் பலவற்றுள் கலந்திருக்கின்றன. அவற்றைக் கண்டறியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தமிழ் மொழியின் தொன்மையைக் கண்டறியத் தமிழ்நாடு மட்டுமன்றி அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த அகழாய்வுப் பணிகளும் வரலாற்று ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவேண்டும். இவை இதுவரை கண்டறியப்படாத புதிய கண்டுபிடிப்புகளையும் கல்வெட்டுக்களையும் கண்டறிய உதவும். தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகள் தமிழ்நாடு என்ற குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள் அடங்கிவிடாமல் விரிவான பார்வையுடன் அமைவதற்கான முறையான முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும். எனவே இவற்றை முன்னெடுப்பதில் தமிழக அரசுடன் அயலகத் தமிழ் அமைப்புகளும் இணைந்து செயல்படும் போது இவை சாத்தியப்படும்.

நன்றி. வணக்கம்.

உரை காணொளியாக: https://youtu.be/EP24Blk25fI

You may also like