“மனோன்மணீயம்” சுந்தரனார்

துரையில் இருந்து ஒரு காலத்தில் கேரளத்து ஆலப்புழைக்குக் குடியேறிய சைவ வேளாளர் வழியில் வந்த பெருமாள் பிள்ளை, மாடத்தி தம்பதிக்கு 1855ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி சுந்தரனார் பிறந்தார். இவர் நாற்பத்து இரண்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகினில் இருந்திருந்தாலும், வாழ்வாங்கு வாழ்ந்து 1897ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி மறைந்தார்.

“மனோன்மணீயம்” சுந்தரனார்

சுந்தரத்துக்கு 1877 தை மாதம், 22 வது வயதில், அவரது பெற்றோர், சிவகாமியை மணம் செய்து வைத்தனர்.
நடராசன் என்றொரு மகன் பிறந்தார்.

சுந்தரம் அன்றைய கல்வியை முழுமையாக, முறையாகப் பெற்றவர். ஆலப்புழையில் ஆங்கில – தமிழ்ப் பாடசாலையில் பிரவேசம் தேர்ச்சி பெற்று,
மெட்ரிக் (1871),
எஃப்.ஏ (1873),
பி.ஏ (1876)
படிப்புகளைத் திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தேறினார். மெட்ரிக் தேர்வில் – முதலாவதாகத் தேறி உதவித் தொகை பெற்று, அனைத்துப் படிப்புகளையும் முடித்தார். பின்பு 1880ல் எம்.ஏ. தேறினார்.
இலக்கியம்,
வரலாறு,
தத்துவம்
ஆகிய துறைகளில் பாண்டித்தியம் பெற்று உயர்ந்தார்.

இளங்கலை முடித்ததும், இவரது புலமைத் தெளிவு, திறம் கண்டு திருவனந்தபுரம் மகாராசா கல்லூரி முதல்வர் இராஸ், தமது கல்லூரியிலேயே ஆசிரியராக நியமித்தார். 1877ல் திருநெல்வேலி ஆங்கில – தமிழ்ப் பள்ளியில் முதல்வரானார். இவர் தமது காலத்தில் எஃப்.ஏ. கல்வியை ஏற்படுத்தி, அந்த நிறுவனத்தைக் கல்லூரியாக ஆக்கினார் அது “இந்துக் கல்லூரி” எனப் பெயர் பெற்றது. 1879ல் அதே மகாராசா கல்லூரியில் மீண்டும் தத்துவ ஆசிரியர் ஆனார். 1885ல் மகாராசா கல்லூரியில் தத்துவ பேராசிரியராக நியமிக்கப்பட்டு இறுதி வரை அங்கு பணிபுரிந்தார்.

தமிழ்ப்பணி:-

சுந்தரனார் ஆங்கிலமொழி அறிவு நிரம்பப் பெற்றவர்.
திருமுருகாற்றுப்படை,
நெடுநெல்வாடை
ஆகிய பழந்தமிழ் நூல்களை ஆங்கில உரைநடையில் வெளிநாட்டார் அறியும்படி அளித்தார். மேலும்,
திருஞானசம்பந்தர் காலம்,
பத்துப்பாட்டு (1891),
முற்காலத் திருவாங்கூர் அரசர் (1894),
ஆறாம் நூற்றாண்டுத் திருவாங்கூர் அரசர் (1896),
திருவாங்கூர் கல்வெட்டுகள் (1897)
ஆகிய ஆய்வுக் கட்டுரை மற்றும் நூல்களை அளித்தார்.
நூற்றொகை விளக்கம் (1885,1889),
மனோன்மணீயம் (1891),
நம்பியாண்டார் நம்பி கால ஆய்வு,
பொதுப்பள்ளியெழுச்சி,
நற்றாயின் புலம்பல்,
சிவகாமி சரிதம்
ஆகிய நூல்களைத் தமிழில் படைத்தார்.
சீவராசிகளின் இலக்கணமும் பிரிவும் (1892),
மரங்களின் வளர்ச்சி (1892),
புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும் (1892)
ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

இவருடைய குடிமைப் பண்புகள் கண்டு, ஆங்கில அரசு “இராவ் பகதூர்” விருதை (1896) அளித்தது. கிராண்ட் டஃப் என்ற ஆங்கில அறிஞர் இவருடைய வரலாற்றுப் புலமை உணர்ந்து, அரசுக்குரிய வரலாற்று ஆராய்ச்சிக் கழக உறுப்பினர் தகுதிக்குப் (Fellow of Royal Historical Society)பரிந்துரைத்தார். திருவாங்கூர் அரசர் வரலாறு எழுதியதால் அரசருக்குரிய ஆசிய ஆராய்ச்சிக் கழக உறுப்பினராக (Fellow of Royal Asiatic Society) ஏற்றுக் கொள்ளப்பட்டார். இவருடைய பணிக் காலத்தில் 1891 முதற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக உறுப்பினராக (Fellow of Madras University) ஏற்றுக்கொள்ளப்பட்டார். அதனால்
இலக்கியம்,
வரலாறு,
தத்துவத் துறைப்
பல்கலைக் கழகத் தேர்வுகளுக்குத் தேர்வாளராக உயர் பணி புரிந்தார்.

சுந்தரனார் எம்.ஏ. தேர்வு எழுதும்போது பம்மல் விஜயரங்க முதலியார் வீட்டினில் தங்கித் தயார் செய்தார்.
சாமிநாதப் பிள்ளை,
வலிய மேலெழுத்து திரவியம் பிள்ளை,
சுப்பிரமணிய பிள்ளை
ஆகியோருடைய நட்புறவால் திருவனந்தபுரத்தில் “சைவப் பிரகாச சபை”யை ஏற்படுத்தி, 1885ல் அதற்கு ஒரு கட்டடம் கட்டினார்கள். அந்தக் கட்டடம் இன்றும் உள்ளது. இங்குதான் விவேகானந்தருடன் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது, ஒரு திராவிடன் என அவரிடம் தம்மைக் குறிப்பிட்டுக் கொண்டார்.

அன்று கல்வி உலகினில் புகழொளி பெற்றுத் திகழ்ந்த,
பூண்டி அரங்கநாத முதலியார்,
வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி,
அரங்காச்சாரி,
உ.வே.சாமிநாதய்யர்
ஆகியோருடன் சுந்தரனார் நட்பு கொண்டிருந்தார். அருட் தந்தை ஜி.யு. போப்புடன் இடையறாத நட்பும் தொடர்பும் கொண்டு இருந்தார்.

சுந்தரனார் தத்துவயியலாளரும், வேதாந்தியும் ஆவார். அதோடு சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும், வரலாற்று அறிஞரும் கூட. இந்த முறையிலேயே திருவாங்கூர் மற்றும் சென்னை இராசதானியில் உயர்வாக அறியப்பட்டிருந்தார். இந்தத் துறையினில் இவரது ஆய்வுகளை “Tamilnadu Antiquary”, சென்னை கிறித்தவக் கல்லூரி பத்திரிகை ஆகிய இதழ்கள் வெளியிட்டன.

சுந்தரனாரின் தத்துவ, வேதாந்த ஞான குருவாகத் திகழ்ந்த கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள் தமது
நிஜானந்த விலாசம்,
சுவானுபவ மஞ்சரி,
ஸ்வானுபூதி இரசாயனம்
ஆகிய நூல்களைப் போதித்தார். தத்துவராயர் உணர்த்திய பிரம்ம கீதைக்கு உரையும் தந்தார். சுந்தரனார் நிஜானந்த விலாசம் நூலை மாவடி சிதம்பரம் பிள்ளையுடன் சேர்ந்து பதிப்பித்தார். இந்த நூல் இன்றும் உண்டு.

சுந்தரனார் உயிரினப் பரிணாம அறிவை ஆல்ஃப்ரட் இரஸ்ஸல் வாலஸ் எழுதிய டார்வினியம் நூலின் வழி (1889) பெற்றார். விதைகள், மலர்கள், வண்டுகள், புழுக்கள் முதலான உயிர்களின் செயல்களை விளக்குவதற்கு அந்த அறிவை அனுசரித்துக் கொண்டார்.

1894ல் கல்வெட்டு ஆதாரங்களின் அடிப்படையில் கி.பி.13ம் நூற்றாண்டுத் திருவாங்கூர் (வேணாடு) மன்னர்களின் வரலாற்றைக் கண்டார். தம் பங்கிற்கு 14 கல்வெட்டுகளை கண்டு பிடித்தும் காட்டினார். ஆதி சங்கரர் கொல்லம் ஆண்டிற்கு நான்கு ஆண்டுக்கு முன் மறைந்தார் எனவும் உரைத்தார். சுந்தரனாரின் சாதனையால் திருவாங்கூர் மன்னர் வரலாறு முழுமை கண்டது.

1891ல் சுந்தரனார் தாம் இயற்றிய மனோன்மணீயம் நாடகத்தை வெளியிட்டார். 1877-78ல் நெல்லையில் கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளிடம்
பிரம்ம கீதை,
சூதசம்ஹிதை,
பெருந்திரட்டு
காட்டும் அத்வைத சிந்தனைகளைக் கற்றறிந்தார். அதனால் “பரமாத்துவித” என்ற வேதாந்த ஞானத்தை உணர்ந்தார். தத்துவராயர் முறைப்படுத்திய பரமாத்துவித வேதாந்தத்தையே உட்பொருளாக வைத்து மனோன்மணீயம் நாடகத்தைப் படைத்தார். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எழுதினார். உ.வே.சாமிநாதய்யரிடம் கொடுத்து திருத்தங்கள் செய்து கொண்டார். இந்த நாடகம்,
தரத்தாலும்,
நுட்பத்தாலும்
கட்டுக்கோப்பாலும்
சிறந்து விளங்குகிறது. மேலும் பல்கலைக் கழகப் பாடநூலாகவும் கற்பிக்கப்பட்டது. அத்தோடு இந்த நூலில் இடம் பெற்றுள்ள “நீராடும் கடலுடுத்த நிலமடந்தை” என்ற பாடல்தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக தமிழகம் முழுவதும் இன்றளவும் ஒலிக்கிறது. தேசிய இயக்கம் உருவாகிக்கொண்டுவந்த அந்தக் காலத்தில்,
மொழி அபிமானம்,
தேச அபிமானங்களைக்
கொள்கைப் பற்றோடு புலப்படுத்தினார். அதனால் தமிழ் மக்களிடையே மொழி மற்றும் நாட்டுப் பற்றுகளுடன் இயக்கங்கள் தோன்ற உள்ளொளியாகத் திகழ்ந்தார்.

சுந்தரனாரின் மகன் நடராசன் இந்திய சுதந்திரப் போராட்டம் வீறு கொண்ட போது, 34வது வயதினில் மகாராசா சமஸ்தான எதிர்ப்புப் போராட்டத்தினில் முன்னணியில் நின்றார். இது கண்ட ஆங்கில அரசு அவருடைய சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டது. ஆதலால் அவர் ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டது. ஓலைக் குடிசையில் வாழ நேரிட்டாலும் நடராசன் தேசிய ஆன்ம ஒளியோடு திகழ்ந்தார்.

சுந்தரனார் அதி உன்னத வாரிசுச் செல்வத்தையும், வீறார்ந்த இயக்கத் தொடர்ச்சிகளையும் கொண்டு வரலாற்றினில் செம்மாந்த நிலையினில் திகழ்கிறார்.

முனைவர் கி. முப்பால்மணி

நன்றி: தமிழ்மணி (தினமணி)
மின்தமிழ் இடுகை: கண்னன் நடராஜன்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *